திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு


திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு | Read in Islamtoall.com

.

திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கினான் என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் ஏராளமான இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர். முதல் மனிதராகிய ஆதம் முதல், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று திருக்குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்று திருக்குர்ஆன் 14:4 வசனம் கூறுகிறது.

இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத்தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதற்கான சான்றுகளை 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3 ஆகிய வசனங்களில் காணலாம். மேலும் 187வது குறிப்பையும் வாசிக்கவும்.) மற்ற இறைத்தூதர்கள் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அனுப்பப்பட்டது போல் இல்லாமல் அகில உலகுக்கும் இறைத்தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆன் எனும் வேதத்துக்குப்பின் உலகில் வேறு வேதம் அருளப்படாது என்பதால் திருக்குர்ஆன் இறுதி வேதம் எனப்படுகிறது. அரபு மொழியில் அருளப்பட்டது ஏன்?

உலகம் முழுவதற்கும் வழிகாட்டும் வேதம் அரபுமொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம். அரபுமொழி தான் தேவமொழி என்பதோ, அதுதான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கொள்கை. அப்படியானால் அரபு மொழியில் ஏன் இவ்வேதம் அருளப்பட வேண்டும்? இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வாழ்க்கை நெறியைக் கொடுத்து ஒரு வழிகாட்டியை அனுப்பும்போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வாழ்க்கை நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது போன்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க மாட்டார்கள். யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாது. அரபுமொழிக்குப் பதிலாக தமிழ்மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்திடக் கூடாது. நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ, மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்கிறோம். அதுபோல் உலக ஒருமைப்பாட்டுக்காகவும், உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும். ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த அவர்களுடைய தாய்மொழியான அரபுமொழியில் திருக்குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபுமொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபுமொழியில் திருக்குர்ஆன் அருளப்படவில்லை. (அரபுமொழி மட்டும் வேதமொழி அல்ல என்பதை அறிந்திட 227 வது குறிப்பைப் பார்க்கவும்.)

மேலும் படிக்க....

இணைத்துடுங்கள்

இஸ்லாமிய முகநூல், இஸ்லாமியர்களுக்காக

Islamic Facebook

இப்பொழுதே இணைத்துடுங்கள்